பாஜகவைச் சேர்ந்த சாமியார் ஆதித்யநாத் ஆட்சி செய்யும் உத்தரப்பிரதேச மாநிலத்தின் அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தில் இரண்டு தனித்தனி விடுதிகள் உள்ளன. அந்த விடுதிகளில் தங்கி படிக்கும் இரு பிரிவு மாணவர்களிடையே திங்களன்று மோதல் ஏற்பட்டது. அப்போதைய சூழ்நிலையில் மோதல் தடுக்கப்பட்டது. ஆனால் அடுத்த நாள் இரவு மாணவர்களிடையே மீண்டும் மோதல் ஏற்பட்ட நிலையில், ஒருபிரிவு மாணவர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 மாணவர்கள் காய மடைந்தனர். காயமடைந்த 3 மாணவர்களும் ஜவஹர்லால் நேரு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இவர்கள் அலிகார் பல்கலைக் கழகத்தில் படிக்கும் மாணவர்களாக இருந்தாலும் அவர்கள் விடுதி மாணவர்கள் அல்ல என கல்லூரி நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மாணவர்கள் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரி சஞ்சய் ஜெய்ஸ்வால் கூறினார். விடுதிக்கு தொடர்பில்லாத மாணவர்கள் (துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்கள்) இரவு நேரத்தில் அவர்கள் எப்படி விடுதிக்குள் நுழைந்தார்கள் என்பது குறித்து விசாரித்து வருகிறோம் என பல்கலைக்கழக விளம்பரப் பொறுப்பாளர் பேராசிரியர் அசிம் சித்திக் கூறியுள்ளார். பல்கலைக்கழக விடுதியில் துப்பாக்கிச் சூடு நடந்ததால் முஸ்லீம் பல்கலைக்கழகத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.